தோட்டத் தொழிலாளர் வேதனம்:
அகப், புறச் சூழ்நிலை குறித்த ஓர் பார்வை
A.R.C. ஜோன்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்காக இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பெருந் தோட்டத் துறைத் தொழிற்சங்கங்கட்குமிடையே கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படுகின்றது. இறுதியான ஒப்பந்தம் 2011ம் ஆண்டு ஜுன் 5ம் திகதி கைசாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளமாக 380 ரூபாவும் 75 சதவீத நாட்களுக்கு மேல் வேலைக்கு சென்றிருப்பவர்களுக்கான வரவுக் கொடுப்பனவாக 105 ரூபாவும் தேயிலை விலைக்கான கொடுப்பனவாக 30 ரூபாவும் உட்பட மொத்தச் சம்பளமாக 515 ரூபா இந்தப் புதிய கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.
கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பமிடுகின்ற தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களிடையேயும் 500 ரூபாய் அடிப்படைச் சம்பளம் நிர்ணயிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடே இருந்து வந்தது. பொதுவாக, ஊடகங்கள் வாயிலாக வந்த அறிக்கைகளில் 500 ரூபாவுக்கு மேல் அடிப்படைச் சம்பளம் நிர்ணைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்பட்டது. இறுதியில் 400 ரூபா அடிப்படை சம்பளங் கூட நிர்ணயிக்கப்படாமை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றில் தொழிலாளர் தரப்பில் கோருகின்ற சம்பளம் கிடைத்ததில்லை. அதே நேரம் தொழிலாளர்களின் ஒற்றுமையே தொழிற்சங்கங்களின் பலமாகக் காணப்பட்டிருக்கின்றது. அதன் மூலமே பல உரிமைகள் வென்றெடுக் கப் பட்டிருக்கின்றன. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தொழிற் சங்கங்களிடையே காணப்படுகின்ற பல்வேறு கருத்து முரண்பாடுகளும் பிளவுகளும் அவற்றின் மிகப் பெரும் பலவீனமாகவுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தின் சட்டத் தன்மை
வேதனம் உட்படத், தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகயையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்காக முதலாளிகட்கும் தொழிலாளர் களின் பிரதிநிதிகளான தொழிற்சங்கங்கட்கும் இடையே கூட்டுப் பேரம் பேசப்படுவதும் அதனை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதுமான நடைமுறைகள் உலகலாவிய முறையில் காணப் படுகின்றன. 1949ம் ஆண்டு உலகத் தொழிலாளர் தாபனத்தினால் ஏற்படுத்தப்பட்ட 98வது பிரகடனம் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து செயற்படவும் கூட்டுப் பேரம் பேசவுமான உரிமைகளை உறுதிப் படுத்துகின்றது.
1950ம் ஆண்டு 43ம் இலக்கக் கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின் பிரகாரம், 40 சதவீத தொழிலாளர்கள் அங்கம் வகிக்கின்ற தொழிற் சங்கங்கள் மாத்திரமே கூட்டுப் பேரம் பேசமுடியும். இலங்கையில் உள்ள நடைமுறைகளின்படி, முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையே ஏற்படுத்தப்படுகின்ற கூட்டு ஒப்பந்தங்கள் தொழில் ஆணையாளரின் ஒப்புதலுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப் படுமானால் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் காலங்களில் அதன் சட்டத் தன்மை உறுதிப்படுத்தப்படும்.
ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளை மீறுவதாக ஒரு கூட்டு ஒப்பந்தம் அமையக்கூடாது. அவ்வாறு அமையுமாயின் அதனை நிராகரிக்கும் அதிகாரம் தொழிற்சங்கங்களுக்கு உண்டு. மேலும், கூட்டு ஒப்பந்தங்கள் தொழிலாளர்களுக்குப் பாதகமாக அமையாதிருப்பதனைக் கண்காணிக்கின்ற கடப்பாடு தொழில் திணைக்களத்திற்கு உண்டு. இதுவே இலங்கை ஜனநாயகத்தில் தொழில் திணைக்களத்தின் நேர்மையான செயற்பாடாகவும் இருக்கமுடியும்.
கூட்டுப்பேரமும் கூட்டு ஒப்பந்தங்களும் ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்க நலன் சார்ந்தன என்று கூறமுடியாது. இருந்தும் ஒரு முதலாளித்துவக் கட்டமைப்பில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு பொறிமுறையாகவே அவற்றைக் கொள்ள முடியும். இன்றைய உலகமயமாக்கற் சூழலிலே தனியார் தொழில் நிறுவனங்கள் உச்;சக்கட்ட இலாபத்தினை அடையும் நோக்குடனேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழிலாளி வர்க்கம் மிகமோசமாகச் சுரண்டப்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. எனவே, தொழிலாளர்களின் பிரதிநிதிகளாகிய தொழிற்சங்கங்க ளிடையே ஐக்கியமும், தொழிலாளர் வர்க்க நலனும், கருத்தியல் தெளிவும் இருக்கின்ற போதுதான் தொழிலாளர்களுக்குச் சாதகமான கூட்டு ஒப்பந்தத்தினை ஏற்படுத்தப்பட முடியும் என்பது யதார்த்தம்.
பெருந்தோட்டத் தொழிற் துறையின் நிலை
பெருந்தோட்டத் தொழிற் துறையினைப் பொறுத்தவரை, தேயிலை, இறப்பர் போன்ற துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை பார்க்கின்ற போது சாதகமான சூழ்நிலையே காணப்படுகின்றது. தேயிலைத் தொழிற் துறையில் அண்மைக் காலத்தில் விலை உயர்விலும் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க சாதகமான தன்மைகளை காணக்கூடியதாக உள்ளது.
தேயிலை உற்பத்தியில் 2006ம் ஆண்டில் இருந்து விலையில் அதிகரிப்பு இருக்கின்றது. 2007ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு 1 பில்லியன் (நூறு கோடி) அமரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைத்திருந்தது. 2008ம் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதும், பின்பு விலையில் சாதகமான நிலையே தொடர்கின்றது. தேயிலை உற்பத்தி வரலாற்றில் மிக அதிகளவாக 318.7 மில்லியன் கிலோ தேயிலை 2010 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் தேயிலை ஏற்றுமதி விலையும் கிலோவுக்கு 495 ரூபாவாக இருந்திருக்கின்றது. 2011ம் ஆண்டு நடுப்பகுதிகளில் ஒரு கிலோவுக்கான தேயிலை விலை சராசரியாக 350 ரூபாவாகவும் ஏற்றுமதி மூலமாக 530 ரூபாவாகவும் சந்தை நிலை காணப்பட்டது. தற்போது அந்த நிலையில் வளர்ச்சிக் காணப்படுகின்றது. இறப்பாத்; தொழிற் துறையில் 2010 ஆண்டு 2.9 பில்லியன் ரூபாய்கள் மொத்த வருமானம் கிடைத்துள்ளது (35 சதவீத அதிகரிப்பு). அத்துடன் இலாபம் மாத்திரம் ரூபா 129 மில்லியனில் இருந்து ரூபா 837 மில்லியன்களாக அதிகரித்திருக்கின்றது.
முதலாளிகள் தரப்பு நியாயப்படுத்தல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலை குறித்துத் தோட்டத் துறை முகாமைத்துவத் தரப்பில், தோட்டத் தொழிலாளர்கள் தரமான வாழ்க்கை வாழ்கின்றார்கள் அல்லது வாழ்வதற்கு போதுமானளவு வேதனம் கிடைப்பதாகவே பொதுவாகக் கூறுகின்றனர். இலங்கைத் தேயிலைச் சபை வெளியிடுகின்ற Tea Market Update என்ற வெளியீடு ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “பெருந்தோட்டத் தொழிற் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையின்படி, பெருந்தோட்டப் பகுதியில் வறுமையின் நிலை ஒருசில வருடங்களில் மூன்று மடங்கு குறைந்துள்ளது. பெருந் தோட்டத் துறை தனியார்மயமாக்கப்பட்ட 1995/1999ம் ஆண்டுக் காலப்பகுதியில் 38 சதவீதமாக இருந்த வறுமை நிலை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது”.
மேலும் தோட்டத் தொழிலாளர்களின் வருமானமும், கடந்த 15 ஆண்டுகளில் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறித், தோட்டத் தொழிலாளர்கள் தரமான வாழ்க்கை வாழ்வதாக நியாயப் படுத்துகின்றனர்.
வறுமையின் நிலை மூன்று மடங்கு குறைந்திருந்தால் அது மிகப் பெரிய சாதனைதான். அவ்வாறான நிலை இருக்குமானால் அது சமூகத்தினுடைய சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களில் பிரதிபலிக்க வேண்டும். வறுமையை வெறும் மந்திரத்தால் ஒழித்துவிட முடியாது. எனவே இப் புள்ளிவிபரத்தின் நம்பகத்தன்மை குறித்துச் சந்தேகம் எழுகின்றது. (இதைப்பற்றி இக் கட்டுரையில் ஆராயப் பட்டுள்ளது).
2006/2007ம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, வறுமையின் நிலை பெருந்தோட்டப் பகுதியில் 33.3 சதவீதமாக இருந்த போது அதற்கு காரணம் தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் அல்ல வேறுகாரணங்கள் இருப்பதாக நியாயப்படுத்தினார்கள். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் குடிப்பழக்கம் இருப்பதாக பிரசாரப்படுத்தினர். 2010ம் ஆண்டு மே மாதம் இலங்கைத் துரைமார் சங்கம் (Planters Association of Ceylon) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தோட்டப் பகுதியில் 60 சதவீதத்திற்கு மேல் குடிப் பழக்கம் உள்ளதாகக் கூறினார்கள். அத்துடன் அங்கு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
“வறுமை என்ற பொருத்தமான பதம், எப்பொழுதும் ஒருவருடைய வருமானத்துடன் நேரடியாகத் தொடர்புடையதி;ல்லை என நான் நம்புகின்றேன். எப்பொழுதும் 30,000 ரூபாவுக்கும் மேல் வருமானத்தைப் பெற்றும், நீர் வருமானத்தைப் பொறுப்பற்ற முறையில் செலவிடுவீரானால், நீர் தொடர்ந்தும் வறுமையில் வாழ இயலும்.”
(I believe that “poverty” is a relevant term which is not directly linked always to the income of a person. You could always receive an income in excess of even Rs 30,000/- per month and still live in poverty if you spend it in an irresponsible manner).
தினமும் ஒரு தொழிலாளி வேலை செய்தலும், மேற்படி கூற்றின்படி, 30000 ரூபா வருமானத்தினைப் பெறமுடியாது. அதைவிட, இதனை ஒட்டுமொத்த சமூதாயத்திற்கும் பொதுமைப்படுத்திப் பேசுவதில் நியாயமென்ன இருக்கின்றது?.
குடிப் பழக்கம் மலையகத்தில் இருக்கின்றது தான். ஆனால் இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகமோசமான குடிப் பழக்கம் உள்ளதெனக் கூறமுடியாது. குடிப் பழக்கத்தின் மூலம் ஏற்படுகின்ற நோய்களில் மிகப் பிரதானமானது சிரோசிஸ் (cirrhosis) எனும் நோய் ஆகும். அந் நோயினாற் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொழும்பு, காலி, மாத்தறை போன்ற பகுதிகளிலேயே அதிகமாக உள்ளது. அங்கு உள்ள வைத்தியசாலைகளில் அந் நோய்க்கென்று தனிப் பிரிவுகள் காணப்படுகின்றன.
பெருந்தோட்ட மக்கள் அதிமாக வாழக்கூடிய நுவரெலியா, பதுளை போன்ற பகுதிகளில் அந் நோயாற் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. எனவே முதலாளிகள் தரப்பில் முன்வைக்கப் படுகின்ற வாதங்களில் விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் இல்லாமல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவிதமான விளக்கங்களைக் கொடுத்து வருகின்றார்கள். கடந்த 15 வருடங்களில் 500 வீதம் சம்பளம் அதிகரிக்கப் பட்டுள்ளதாகக் கூறிப் பெருமைப்படுவது சிறுபிள்ளைத்தனமானது. இக் காலகட்டத்தில் பணவீக்கம் எத்தனை மடங்கு ஏற்பட்டுள்ளது, நாணயத்தின் பெறுமதி எத்தனை மடங்கு குறைந்துள்ளது, பொருட்களின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பனவற்றுடன் ஒப்பிடுகையில், சம்பளம் இன்றுவரை போதாது என்பதுதான் தொழிலாளர்களின் வரலாற்றில் நாம் பெற்ற அனுபவம்.
தோட்டத் தொழிலாளர்களின் நலனில்
இலங்கை அரசாங்கத்தின் அக்கறை
அரசாங்கத்தின் புள்ளி விபரங்களும் நம்பகத்தன்மையும்
இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களம்; வெளியிட்டுள்ள 2009ஃ2010ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் பின்வருமாறு கூறுகின்றன.
இலங்கையில் வறுமை நிலை 15 சதவீதத்தில் இருந்து 9 சத வீதமாகக் குறைந்துள்ளது. மேலும் இந் நிலை பெருந்தோட்டப் பகுதியில் 33.3 சதவீதத்தில் இருந்து 11.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் வறுமை, 33.8 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக, 77.6 சதவீதத்தால் குறைந்துள்ளது.
இப் புள்ளிவிபரங்கள் மக்களின் வளர்ச்சியைப் பிரதிபலிக்க வில்லை. மாறாக மக்கள் மீது அரசாங்கத்திற்கு உள்ள பொறுப்பற்ற தன்மைகளையே பிரதிபலிக்கின்றது. குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களின் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்குமுறையின் ஒரு வடிவமாகவே இதனைக் கொள்ளமுடியும். மந்தபோஷணை, நிறை குறைந்த குழந்தைப் பிரசவம், எழுத்தறிவின்மை விகிதம், இரத்தச் சோகை, சுகாதார வசதியின்மை, சுத்தமான குடிநீர் வசதியின்மை, வீட்டு வசதிகள் இன்மை, இறப்பு விகிதம், வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை போன்றவை பெருந்தோட்டப் பகுதியிலேயே இன்றும் அதிகமாக உள்ள நிலையில் எவ்வாறு திடீரென வறுமை குறைய முடியும் என்ற நியாயமான கேள்வி எழுகின்றது.
2006/2007 காலப்பகுதியில் வறுமையின் அடிப்படையில் வளர்ச்சி யடைந்த மாவட்டங்களின் வரிசையில் (வட மாகாணம் தவிர்ந்து), நுவரெலியா மாவட்டம் இறுதி நிலையில் இருந்தது. ஆனால் இன்று அது 8வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. வறுமையினை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச வேலைத்திட்டங்கள் என்ன செய்யப்பட்டன? வறுமை ஒழிப்பிற்காக தயாரிக்கப்பட்ட பெருந்தோட்ட அபிவிருத்திக்கான 10 ஆண்டு தேசிய அபிவிருத்தி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாது அத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட அபிவிருத்திக்காகச் செயற்பட்டு வந்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இல்லாதொழிக்கப் பட்டுள்ளது. வறுமை ஒழிப்பிற்காகவே தேசிய ரீதியில் அமுல்படுத்தபடும் திட்டமாகிய ‘சமூர்தி’ திட்டதில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் வறுமை மாத்திரம் குறைந்துள்ளது என்பது வேடிக்கையாக இருக்கின்றது.
பெருந்தோட்ட மக்கள் இன்று தொலைபேசி, தொலைக்காட்சி, கேபிள் டீ.வி. போன்றவற்றை பயன்படுத்திக்;கொண்டு வசதியாக இருப்பதாக இதற்கு நியாயம் கூறப்படுகின்றது. பெருந்தோட்டப் பகுதியில் எல்லோரும் இவ்வாறான வசதியான வாழ்க்கை வாழவில்லை. ஆனால் இலங்கை முழுதும் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை காலத்தின் கட்டாயமாகி விட்டது. மேலும் பெருந்தோட்டப் பகுதியில் வறுமை குறைந்துள்ளது என்பதினைக் குறிப்பிட்டுள்ள அதே நேரம் வறுமைக்கு அடிப்படையாகிய வருமானம், போசாக்கு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற நிலைகள் எவ்வாறு உள்ளன என்பதற்கான தெளிவான விளங்கங்கள் இல்லை.
கல்விக்கான அரசாங்கப் பங்களிப்பு
மத்திய வங்கி ஆண்டறிக்கையின்படி மொத்தத் தேசிய உற்பத்தில் கல்விக்காகச் செலவிடப்படும் தொகை வெறும் 1.9 சதவிகிதமாகும். (2009ம் ஆண்டு 2.1 சதவிகிதம்). மேலும் ஒட்டுமொத்த இலங்கையிலும் பாடசாலை கல்வியில் ஒரு ஆசிரியருக்கு 18 மாணவர் வீதம் இருப்பதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பாடசாலைகளில் எத்தனை பாடசாலைகளில் இந் நிலைமையுள்ளது?
சுகாதாரத்திற்கான அரசாங்கப் பங்களிப்பு
சுகாதார நிலைமைகளைப் பொறுத்தவரையில் மொத்தத் தேசிய உற்பத்தியில் வெறும் 1.3 சதவிகிதமான பங்கே (2009ம் ஆண்டு 1.5 சதவிகிதம்) சுகாதாரத்திற்காகச் செலவிடப்படுகின்றது.
ஒட்டுமொத்த இலங்கையிலும் 568 அரச மருத்துவமனைகளில் 69501 நோயாளிகளுக்கான வசதிகள் (கட்டில்கள்) காணப்படுகின்றன. அதாவது, ஆயிரம் பேருக்கு 3 கட்டில்கள் வீதமே காணப்படுகின்றது. மருத்துவர்களைப் பொறுத்தவரையில் 1000 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமே இருக்கின்றனர். இது ஒட்டுமொத்த இலங்கையின் நிலையைக் குறிக்கின்றது.
பெருந்தோட்டப் பகுதி மக்கள் தேசிய சுகாதார சேவையில் இருந்து புறக்கணிக்கபட்ட நிலையில் இங்கு சுகாதார நிலை எவ்வாறு இருக்கும் என்பதினைப் புரிந்து கொள்ளமுடியும்.
கல்வி, சுகாதாரம் போன்ற காரணிகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு மிகக்குறைவாக இருப்பதே நமது நாடு அபிவிருத்தி நிலையில் பின்னடைவாக இருப்பதினை வெளிப்படுத்துகின்றது. இது இவ்வாறு இருக்கையில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் குறித்து பெருமையாக வெளியுலகிற்கு காட்டிக் கொள்வதினை முழுமையான சேவையெனக் கூறமுடியுமா?
எனவே, அபிவிருத்திக்கான பல்வேறு குறிகாட்டிகளில் எந்த விதமான வளர்ச்சிகளும் இல்லாத நிலையில், வறுமை மாத்திரம் குறைந்துள்ளது என்பதில் எந்தளவுக்கு உண்மையும் நம்பகத் தன்மையும் உள்ளது என்பதில் சந்தேகம் ஏற்படுகின்றது. ஒரு ஜனநாயக நாட்டில் வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் ஓரளவேனும் யதார்த்தத்தை பிரதிபலிப்பவையாக இருக்கவேண்டியது அவசியமாகும்.
நாட்டின் தலா வருமானமும் ஜனாதிபதியின் உறுதிமொழியும்
2011ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றிய ஜனாதிபதியவர்கள் நாட்டின் தலா வருமானம் வருடத்திற்கு 2375 டொலர்களாக (2010ம் ஆண்டு) காணப்படுவதாகக் கூறி;; அதனை 2016ம் ஆண்டு 4000 அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர் சமூகமே நாட்டின் தலா வருமானத்திற்குக் குறைவான வருமனத்தையே பெறுகின்றனர்.
ஒரு நாளைக்கு 5 டொலர்கள் வருமானத்தினைப் பெற்றாலும் 1500 டொலர்கள் வருமானத்தையே பெறமுடிகின்றது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் வருமானம் 5 டொலர்களுக்குக் குறைவாகவே உள்ளது. எனவே 2016ம் ஆண்டு 4000 டொலர்களாக உயருமானால் தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் உட்பட அவர்களின் வருமானத்திற்கான மார்க்கங்கள் குறித்து அரசாங்கத்தின் குறைந்தபட்ச பங்களிப்புகள் என்ன? என்ற கேள்வி எழுகின்றது. இறுதியாக நடந்த தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தையிலும் அரசாங்கத்தின் கண்டுங்காணாத போக்கினையே காணக்கூடியதாக இருந்தது.
அரசாங்கத் தோட்டங்களில் தொழிலாளர் நிலை
மேலும், அரசாங்கம் தேயிலைச் சிறு உற்பத்தியாளர்களுக்கு வழங்கு கின்ற ஊக்குவிப்புக்களின் அளவுக்கு அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்டங்களில் வாழுகின்ற தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதில்லை. அரசாங்கத் தோட்டங்களில் வாழுகின்ற தொழிலாளர்கள் பல்வேறு இடர்பாடுகளை அனுபவிக்கின்றனர். தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. மேலும் பல தோட்டங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
சம்பள உயர்வு குறித்து மலையகத் தொழிற்சங்கங்கள்
இக் கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்டிருந்ததற்கு இணங்கத் தொழிலாளார்களின் ஒற்றுமையே தொழிற்சங்க போராட்டங்களுக்கு மிகப் பெரும் பலமாகக் கடந்த காலங்களில் இருந்திருக்கின்றது. ஆனால் இன்று காணப்படும் தொழிற்சங்கங்களின் பிளவுகளே தொழிலாளர்களின் மிகப்பெரும் பலவீனமாகவும் காணப்படுகின்றது.
கடந்த சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைக காலங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி போன்றவை வழமையாக கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் சங்கங்கள் என்ற வகையில் கூட்டு ஒப்பந்தத்தை ஆதரித்து பேசிய அதே நேரம் ஒரு அணியாகச் செயற்பட்டு வந்தன.
மறுபுறம் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஐனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற பிற சங்கங்கள் பல இணைந்து கூட்டு ஒப்ந்த்தை விமர்சித்த அதே நேரம், சில கவனயீர்ப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தன. மக்கள் விடுதலை முன்னணியும் பெருந் தோட்டப்பகுதியில் தேசிய ரீதியில் செயற்பட்டு வருகின்ற சில சிறு தொழிற்சங்கங்களும் சம்பள உயர்வு குறித்த பல கோரிக்ககைகளை முன்வைத்திருந்தன. மேலும், கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை ஊடகங்கள் மூலம் முன்வைத்துத் தொழிற்சங்கங்களிடையே பிளவு களை ஏற்படுத்த முயன்றவர், தற்போது நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான பின்பு மௌனமாகியதன் மர்மம் புரியவில்லை.
ஒட்டு மொத்தத்தில், தொழிற்சங்கங்களிடையே பல வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டனவே தவிர தொழிலாளர்கள் மத்தியில் ஒரு எழுச்சி காணப்பட்டதினை அவதானிக்க முடியவில்லை. மறுபுறம் தொழிற் சங்கங்களிடையேயான முரண்பாடுகள் மேலும் அதிகரித்துச் செல்கின்றன. ஆனாலும் தொழிற்சங்கங்களின் நேர்மையற்ற தன்மைக்குப் பின்வருவனவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம்.
ழூ பொதுவாகவே மிகமோசமான சமூக விரோதச் செயல்களைச் செய்துகொண்டிருக்கும் அரசாங்கத்தை ஆதரிப்பதில் மலையகத்தில் இருக்கின்ற பெரும்பாலான கட்சிகளிடையே ஒற்றுமை இருக்கின்ற அதே நேரம் மக்கள் நலன் சார்ந்த பொது விடயங்களில் அவர்களிடையே பிளவுகள் காணப்படுவது ஏன்?
* கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற சங்கங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுடன் ஐக்கியத்தினைப் பேணத் தயங்குவது ஏன்? குறிப்பாகச், சம்பள விடயத்தில் முரண்பாடுகள் தொடர்வது ஏன்?
* கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கூட்டு ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களையே முன் வைக்கின்றனரே தவிரச் சம்பள உயர்விற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைத்திருக்கிறார்களா? அதற்கான மாற்று வழிதான் என்ன?
* இலங்கையில் உள்ள ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கத் திற்கே பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய தனியார்துறை தொழிலாளர் களின் ஓய்வூதிய திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களும் போராட்டங்களும் எழுச்சிபெற்றிருந்தன. ஆனால் இந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் தொழிலாளர்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மிகக் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கையில் அது குறித்து மலையக அரசியல் கட்சிகளிடையோ, பெருந்தோட்ட தொழிற் சங்கங்களிடையோ காத்திரமான எதிர்ப்புகள் காணப்படவில்லை. பலர் அதனை ஆதரித்தும் பேசுகின்றனர். இந்த உதாரணமே அரசாங்கத் தினை எதிர்ப்பதற்கு மலையக அரசியல் கட்சிகள் தயாரி;ல்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.
* அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் அரசாங்கத்தின் எல்லாத் திட்டங்களையும் ஆதரித்துக்கொண்டிருக்கும் மலையக அரசியல் கட்சிகளால் எப்படித் தோட்ட கம்பனிகளை மாத்திரம் எதிர்ப்பதன் மூலம் ஆக்க ப+ர்வமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்?
சில அரசியல்வாதிகள் கட்சி தாவல்களுக்கு ஏற்ப சந்தர்பவாத அறிக்கை விடுகின்ற தன்மை சிறுபிள்ளை தனமாகவும் கீழ்த்தரமாகவும் இருக்கின்றது. கூட்டு ஒப்பந்தம் சார்ந்த அணியில் இருக்கும் போது ஒருவகையான அறிக்கையையும், அதனை விட்டு வெளியில் வந்தவுடன் அதற்குச் சம்பந்தமே இல்லாதவகையில் முரண்பட்ட அறிக்கையினையும் விடுகின்றனர். உதாரணமாகப் பல வருடங்களாகக் கூட்டு ஒப்பந்தத்திற்றிகு எதிரான கடுமையான விமர்சனங்களை முன் வைத்த ஒரு அரசியல்வாதி தற்போது கட்சிமாறியபின் “கூட்டு ஒப்பந்தம் ஒன்றும் 20:20 கிரிகெட் போட்டி இல்லை” என்று கூட்டு ஒப்பந்த்தத்திற்கு ஆதரவாக அறிக்கை விட்டிருந்தது நகைச்சுவையாக இருந்தது.
கூட்டு ஒப்பந்தத்தின் நடைமுறைப்படுத்தல்
கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுவிட்ட நிலையில் 2013ம் ஆண்டு எப்பிரல் மாதம் வரையிலும் இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும். எனவே இக் காலங்களில் குறைந்த பட்ச நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்காக அழுத்தங் களைக் கொடுக்கவேண்டியதும் தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும். பல தோட்ட நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்ததின் உள்ளடக்கங்களை மீறுகின்றனர். எனவே இது குறித்த தெளிவினை ஏற்படுத்துவது அத்தியவசியமாகும்.
இந்த கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள காலங்களில் அந்த ஒப்பந்தம் முழுமையாக அமுல் நடத்தப்படுகின்றதா என்பதினைக் கண்காணிப்பது மிகமுக்கியத் தேவையாகும். மேலும் 2003ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கு பின்பு சம்பளம் தவிர்ந்த ஏனை சில உரிமைகள் சலுகைகள் குறித்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இது குறித்துக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்களிடையே கண்டுகொள்ளாத் தன்மை காணப்படுவது ஏன் என்பது புரியவிலை. எனவே இவ் ஒப்பந்தத்தினையும் புதுப்பி;க்கவேண்டிய தேவையுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலங்கையில் வாழும் பல்வேறு தனியார் துறை ஊழியர்கள் நியாயமான வேதனத்தினை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கமும் மக்கள் நலன் சார்ந்த கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்